திருச்சி: மக்கள் நலக் கூட்டணி உடைய நான் காரணமாக இருக்கமாட்டே என மதிமுக பொதுச்செயலர் வைகோ விரக்தியில் பேசவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவையடுத்து அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது விவாதமாகியிருக்கிறது. இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் கருத்து சொல்ல எதுவுமே இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு தொடர வேண்டும். 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். மத்திய அரசு மறைமுகமாகவோ நேர்முகமாகவோ நெருக்கடி கொடுக்க கூடாது. ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.’
அப்போது, மக்கள் நல கூட்டணி உடைவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்ற வைகோவின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், அது விரக்தியின் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்தல்ல. திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டம், பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு, இவற்றில் திமுக காங்கிரஸ் பங்கேற்றது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் சொன்ன வார்த்தைகள். மக்கள் நல கூட்டணி தலைவர்களிடம் எந்த விரக்தியும் இல்லை என்றார்.