மக்கள் நல கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் விலகியது என்கிற இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை அளிக்கிறது. அதே வேலையில் இடதுசாரிகளோடும் விடுதலைச் சிறுத்தைகளோடும் மதிமுகவின் நட்புறவு தொடரும் என அண்ணன் வைகோ அறிவித்தது சற்று ஆறுதலையும் மகிழ்ச்சியும் தருகிறது. மதிமுக உள்ளிட்ட நான்கு கட்சிகளும் தொடர்ந்து மக்கள் நல கூட்டியக்கமாகவே உடன்பாடு உள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி இயங்குவோம் என்று நாங்கள் அறிவித்து இருந்தோம்.ஆனால் அண்மையில் ஒரு சில பிரச்சனைகளில் நான்கு கட்சிகள் இடையே சில முரண்கள் எழுந்தன. மிகவும் குறிப்பாக நமது பிரதமர் அவர்களின் பணமதிப்பு மீட்கிற நடவடிக்கையை ஐநூறு ஆயிரம் தாள்கள் செல்லாது என்ற அறிவித்த அந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரான நடவடிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கூறினோம். இடதுசாரிகளும் இதனை எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பிரதமர் அவர்களின் நடவடிக்கையை வரவேற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுச்சேரியில் நாளை அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை நடத்துகிறோம். இந்த மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, இந்த முரண்பாடு தான் வெளிப்படையாக பொது வெளியில் விவாதிக்க கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது. எனவே தொடர்ந்து நான்கு கட்சிகளும் இயங்க முடியாத ஒரு நிலையிருப்பதாக அல்லது ஒரு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக மதிமுக உணர்ந்து இருக்கலாம். மதிமுகவினுடைய உயிர்நிலைக்குழு கூட்டத்தில் வேறு என்ன அரசியல் பின்னணி விவாதிக்கப்பட்டதென்று தெரியாது. இந்த முரண்பாட்டின் அடிப்படையில் மதிமுக மக்கள் நலக் கூட்டணியிலிருந்து தொடர்ந்து பயணப்பட இயலாது என்று முடிவெடுத்து இருப்பதாக நான் கருதுகிறேன். ஒரு ஆற்றல் வாய்ந்த ஒருங்கிணைப்பாளாராக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் நல கூட்டணியாகவும் மக்கள் நலக் கூட்டியக்கமாகவும் வழி நடத்தியவர் அண்ணன் வைகோ அவர்கள். வாய்ப்பு கிட்டும்போது மீண்டும் நாங்கள் சேர்ந்து செயல்படுவதற்கான காலம் கனியும் என்று நான் நம்புகிறேன்.
மதிமுக விலகியது என்று அறிவிப்பு வந்த இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து இயங்குவோம். மக்கள் நலக் கூட்டியக்கமாகவே மக்களுக்காக பிரச்சனையின் அடிப்படையில் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து இயங்குவோம். இதனை விரைவில் ஆதிகாரப்பூர்வமாக எமது செயல்திட்டத்தோடு அறிவிப்போம்.