வரலாறு

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வரலாற்று குறிப்புகள்

சனவரி 21 (1990 -2016) 
...................................................................................................................
1982-ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்
துணைவியார் சவீதா அம்மையார் அவர்கள் தலைமையில் பாரதிய தலீத் பேந்தர் இயக்கம்
தொடங்கப்பட்டது. அவ்விழாவில் அவ்வியக்கத்தின் இந்திய பொதுச்செயலாளர் திரு.இராம்தாசு
அத்வாலே கலந்துக் கொண்டார். வழக்குரைஞர் அ.மலைச்சாமி அவர்கள் அவ்வியக்கத்தின் தமிழ்நாடு
மாநில அமைப்பாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். திடிரென்று 1989-ஆம் ஆண்டு
செப்டம்பர் 14 அன்று அமைப்பாளர் திரு.அ.மலைச்சாமி அவர்கள் காலமாகிவிட்டார்.

அவருடைய மறைவையொட்டி முன்னணி தோழர்கள் சிலரைக் கொண்டு 1989-ம் ஆண்டு திசம்பரின்
இறுதியில் வீரவணக்க அஞ்சலி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய தலீத்
பாந்தர் இயக்கத்தின் முன்னணி தோழர்கள் இன்றைய தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை
அவ்வியக்கத்தை தலைமை ஏற்று நடத்தும்படிகேட்டுக் கொண்டார்கள்.
அவ்வேண்டுகோளை முதலில் ஏற்க தயங்கினாலும் பின்னர் 1990 சனவரி 21 அன்று கூடிய பாரதிய
தலீத் பாந்தர் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்
அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வந்தார். அவ்வியக்கத்தின் அமைப்பாளர்
பொறுப்பை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் பாரதிய தலீத் பேந்தர் இயக்கம் என்று அழைக்கப்பட்டு
வந்ததை மாற்றி இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்று அழைத்தார். 1990-ம் ஆண்டு ஏப்ரல்
14-ம் நாள் இயக்த்தின் முதல் கொடியை மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் ஏற்றி
வைத்தார். இன்று எமது இயக்கக் கொடி நாளை நமது தேசியக் கொடி. என்ற முழக்கத்தோடு இயக்கக்
கொடியை அறிமுகம் செய்தார். பின்னர் 1991-ம் ஆண்டு முதல் இந்திய ஓடுக்கப்பட்டோர்
சிறுத்தைகள் என்னும் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என்று மாற்றி அறிவித்தார்.
சாதிய வன்கொடுமைகளை எதிர்ப்பதிலும் தமிழ் தேசிய உணர்வுகளை வளர்த்தெடுப்பதிலும் தீவிர
முனைப்பு காட்டிய விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் புறக்கணிப்பிலும் மிகுந்த தீவிரம்
காட்டி வந்தது.காலப்போக்கில் மக்களின் கட்டளையை ஏற்று 1999 முதல் தேர்தல் அரசியலில்
ஈடுப்பட்டு வருகிறது.

இயக்க விவரம்:
..............................
இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை விளக்குவதாகும்.
சின்னம் என்பது கட்சியின் அடிப்படை முழக்கத்தைக் கொண்ட குறியீட்டைக் குறிக்கும்.

பெயர்:
..................
இயக்கத்தின் பெயர் 'விடுதலைச் சிறுத்தைகள்' என்பதாகும். இயக்கம் என்பது 'கட்சி' என்றும்
பொருள்படும்.

சின்னம்:
.......................
சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில் “சாதி ஒழிப்பே
மக்கள் விடுதலை” என்றும், கீழ்ப்பாகத்தில் “விடுதலைச் சிறுத்தைகள்” என்றும் கருப்பு
பின்னணியில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.

கொடி:
...............
கட்சியின் கொடி நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்களைக் கொண்டதாகும். கொடியின் மேல்
பகுதியில் வானத்தின் நீல வண்ணமும், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு வண்ணமும், சம
அளவுகளில் இருக்கும். கொடியின் மையத்தில் ஐந்து முனைகளையுடைய வெள்ளை விண்மீன்
பொறிக்கப்பட்டிருக்கும். கொடி மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட
அளவுகளில் இருக்கும்.

கொடி விளக்கம்:
.............................
நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும்
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின்
அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.

1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3. மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4. தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்.